வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி அதிகாரபூர்வமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தகவல்..!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியை தக்கவைத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக தேர்தல் அரசியலில் நுழைகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றிபெற்றார். அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், புதுதில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்,பிரியங்கா மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது: விதிமுறைகளின்படி, ஒரு தொகுதியில் மட்டுமே ராகுல்எம்.பி.யாக நீடிக்க முடியும். மற்றொரு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. ஏனெனில் அந்த தொகுதி நீண்ட காலமாக காந்தி குடும்பத்துக்கு மிகவும்நெருக்கமாக இருந்து வந்துள்ளது.
அதேநேரம் ராகுல் காந்தி மீதுஅன்பு வைத்துள்ள வயநாடு மக்கள்,அந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவிரும்புகின்றனர். விதிமுறைகளில் அதற்கு இடமில்லை. எனவே, நீண்ட ஆலோசனைக்கு பிறகு, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இவ்வாறு கார்கே தெரிவித்தார்.
இதன்மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இதுகுறித்து பிரியங்கா கூறும்போது, “ராகுல் ராஜினாமா செய்துவிட்டாரே என்று அப்பகுதி மக்கள் வருத்தப்படாத அளவுக்கு கடுமையாக பணியாற்றுவேன்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.