கண்டி – மாத்தளை வீதி திறப்பு!
அக்குரணையில் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி – மாத்தளை வீதி (ஏ9) தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக கண்டி – மாத்தளை வீதி இன்று (05) காலை தற்காலிகமாக மூடப்பட்டது.
பல கடைகளுக்கு தீ பரவியதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரணை நகரில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் இன்று காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியே வந்த பின்னர், தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியது.
இதேவேளை, உடனடியாக செயற்பட்ட பிரதேசவாசிகள் உணவகத்தினுள் இருந்த சுமார் 50 எரிவாயு சிலிண்டர்களை வௌியே எடுக்க நடவடிக்கை எடுத்ததன் ஊடாக ஏற்படவிருந்த பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீயை அணைக்க கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
கடும் முயற்சிக்கு பின் காலை 10 மணியளவில் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எவ்வாறாயினும், தீ விபத்து காரணமாக உணவகத்திற்கு அருகிலுள்ள வர்ணப்பூச்சு கடை மற்றும் சர்வதேச பாடசாலை உட்பட பல கடைகள் சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.