இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ரி 20 உலகக் கிண்ணத்துடன் நிறைவு பெற்றது. இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்பட ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்காத நிலையில், இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நேற்று (ஜூலை 9) நியமிக்கப்பட்டுள்ளார்..
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலர் ஜெய் ஷா அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க கௌதம் கம்பீரை வரவேற்கிறேன். நவீன கால கிரிக்கெட் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. நவீன கால கிரிக்கெட்டை கௌதம் கம்பீர் மிக அருகில் இருந்து பார்த்துள்ளார். அவரது கிரிக்கெட் பயணத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு அவர் எடுத்துச் செல்வார் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணிக்காக அவர் தெளிவான திட்டத்தினை வைத்துள்ளார். அவரது அனுபவம் மற்றும் தெளிவான திட்டம் இந்த இரண்டும் அவரை தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான சரியான நபராக மாற்றியுள்ளது. இந்த புதிய பயணத்தில் பி.சி.சி.ஐ. அவருடன் உறுதியாக துணை நிற்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
ராகுல் டிராவிட்டின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.