பூஸா சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்
பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கைதிகளிடமிருந்து பல கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றிய சிறைச்சாலை கண்காணிப்பாளருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன்போது சிறைச்சாலையினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறைச்சாலை கண்காணிப்பாளரின் தந்தைக்கு துபாயிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த இனந்தெரியாத நபரொருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும், கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள இந்த சிறைச்சாலை கண்காணிப்பாளரின் வீட்டிற்குக் கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது, அந்த இளைஞர்களில் ஒருவர், தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்தது துபாயில் உள்ள “ஹீனடியன சங்க” என்பவர் என சிறைச்சாலை கண்காணிப்பாளரின் தந்தையிடம் கூறியுள்ளார்.
பின்னர், அந்த இளைஞர்கள் இருவரும் சிறைச்சாலை கண்காணிப்பாளரின் தந்தையிடம் “உங்களது மகனுக்கு அமைதியாக இருக்க சொல்லுங்கள் தேவையில்லாத விடயங்களில் ஈடுபட வேண்டாம் என கூறுங்கள் இல்லையென்றால் உங்களது மகனை கொன்று விடுவோம்” என கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த சிறைச்சாலை கண்காணிப்பாளர் இது தொடர்பில் சிறைச்சாலை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.