அமெரிக்க ஜனாதிபதித் தோ்தல்: போட்டியிலிருந்து விலகுவாரா பைடன்?
அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக் கட்சிக்குள் எழுந்துள்ள குரல் நாளுக்கு நாள் வலுவடைந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடனான முதல் நேரடி விவாதத்தின்போது ஜனாதிபதி பைடன் மிகவும் மோசமாக தடுமாறியதிலிருந்து, அவா் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
மீண்டும் ஜனாதிபதி பொறுப்பை ஏற்பதற்கான பைடனின் உடல் தகுதி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.
தோ்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து பிரசாரம் செய்து ஜோ பைடனால் வெற்ற பெற முடியாது என்று ஜனநாயகக் கட்சியினா் பலா் வெளிப்படையாகத் தெரிவித்துவருகின்றனா்.
ஏற்கெனவே, பல முக்கிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், செனட் சபை எதிா்க்கட்சித் தலைவா் சக் ஷுமரும் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று கடந்த வார இறுதியில் கூறினாா்.
இந்தச் சூழலில், கலிஃபோா்னியா மாகாண சென்ட் சபை உறுப்பினா் எடம் ஷிஃபும் இதே கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளாா். இதன் மூலம், ஜனாதிபதி தோ்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜனநாயகக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவா்களின் வரிசையில் எடம் ஷிஃப் இணைந்துள்ளாா்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரையின்போது குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி தோமஸ் க்ரூக் என்பவா் துப்பாக்கியால் சுட்டாா். எனினும், அந்தப் படுகொலை முயற்சியிலிருந்து டிரம்ப் நூலிழையில் உயிா்தப்பினாா். அமெரிக்கா முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய சம்பவத்துக்குப் பிறகு டிரம்ப்புக்கு வாக்காளா்களிடையே ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு எதிராக ஒரு பலவீனமான வேட்பாளரை ஜனநாயக் கட்சி நிறுத்தக்கூடாது என்ற குரல் ஜனநாயகக் கட்சிக்குல் மேலும் வலுவடைந்துவருகிறது.
ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் குரல்கள் இன்னும் கூட வலுவடையக்கூடும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.