சகல பிரதேச செயலகங்களுக்கும் Tec Park!
நாடளாவிய ரீதியாக சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிப்பேன். இந்த பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் நிறுவுவோம். இதனூடாக இளைஞர்களுக்கு டிஜிட்டல் உலகத்தை அணுகுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரஜா வங்கிச் சேவை வசதிகள், பிரஜா அஞ்சல் வசதிகள், முன்பள்ளி சமுதாய கூடம், பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான வசதிகள், சுகாதார மையம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் ஆகியன உள்ளடங்கும் விதமாக டிஜிட்டல் தொழிநுட்ப Tec Park ஆரம்பிக்கப்படும். இது அரச சேவைக்கும், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய தொழிநுட்பத்திற்கான அணுகலை உருவாக்கும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன் மூலம், கிராமத்து இளைஞர்களுக்கு புதிய படைப்புகளை உருவாக்க முடியும். சமூக வானொலி சேவைகள், சமூக தொலைக்காட்சி சேவைகள், புதிய தொழில்நுட்பம் மூலம் புதிய தகவல் தொடர்பு வலையமைப்புகள் என்பன ஆரம்பித்து வைக்கப்படும். இது கிராம இராஜ்ஜிய வேலைத்திட்டத்தின் பிரதான செயல்பாடு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் ஊடாக நேரடி ஜனநாயகம் முன்னெடுக்கப்படுகிறது. சமூகத்தை மையமாகக் கொண்ட சமூகப் பங்கேற்பு இதன் மூலம் சாத்தியமாகிறது. புதிய தொழில்நுட்பத்தை விட்டும் நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். தவறவிட்ட விடயங்களை சாதிக்க வேண்டும் என்பதற்காக நாம் பாரிய பாய்ச்சலை ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 332 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன
களுத்துறை, பேருவளை, ஹல்கதவில மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் மனித வளத்தையும் மூலதன பாய்ச்சலையும் ஊக்குவிக்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கல்வி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வங்குரோத்து என்ற இந்த புற்று நோயிலிருந்து மீள்வோம்,
இந்த வங்குரோத்து நிலை நமக்கு அசாதாரணமானது. இந்த புற்றுநோய் தானாக ஏற்பட்ட ஒன்றல்ல. நாம் உருவாக்கிக் கொண்ட ஒன்றாகும். இந்த தவறை சரி செய்ய புதிய தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகளை பயன்படுத்தி நேர்மறையான எண்ணத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் திட்டமானது ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்குவதற்கான முதல் கட்டமாகும், இதன் மூலம் ஸ்மார்ட் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார். தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாம் சரியான பாதையில் மீள வேண்டும். தற்போதுள்ள கல்வி முறை பிள்ளைகளுக்கு நியாயமான ஒன்றாக அமையவில்லை. ஒரு சில பகுதிகளை தவிர தற்போதுள்ள கல்வி முறை உலகிற்கு ஏற்றதல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் பாடசாலைகளாக மாறும் பயணத்தின் முடிவில் ஸ்மார்ட் தலைமுறை உருவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.