உலகம் முழுவதும் 4 கோடி மக்களுக்கு H.I.V பாதிப்பு: ஐ.நா. அறிக்கை!
உலகம் முழுவதும் கடந்தாண்டில் சுமார் 4 கோடி மக்கள் H.I.V நோய்ப் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், அதில் 90 இலட்சம் மக்கள் எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருப்பதாகவும் ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சென்ற ஆண்டில் உலகம் முழுவதும் 4 கோடி மக்கள் H.I.V வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நிமிடத்திற்கு ஒருவர் இறந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த உலகமெங்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் நிதி கிடைக்காமல், முன்னேற்றம் குறைந்து புதிய நோய்த் தொற்றுகளை உருவாகி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 6.3 இலட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2004ஆம் ஆண்டில் 21 இலட்சம் மக்கள் உயிரிழந்ததே இதுவரையிலான அதிகபட்சமாகும். ஆனால், 2025இல் உயிரிழப்புகள் 2.5 இலட்சமாக குறையும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது என ஐ.நா வின் எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒதுக்கப்பட்டு, பாகுபாடு காட்டப்படுபவர்களான பாலியல் தொழிலாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமின்றி போதைப் பொருள் உபயோகிப்பவர்களும் கடந்த ஆண்டில் 55 சதவீதமாக உயர்ந்துள்ளனர். இது 2010இல் 45 சதவீதமாக இருந்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பியான்யிமா கூறுகையில், “உலகத் தலைவர்கள் எய்ட்ஸ் தொற்றை பொது சுகாதார அச்சுறுத்தலாகக் கருதி 2030ஆம் ஆண்டுக்குள் அதனை ஒழிக்க உறுதியெடுத்துள்ளனர். அதன்படி, வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் H.I.V தொற்றை 3.7 இலட்சமாக குறைக்க உறுதியளித்துள்ளனர். ஆனால், 2023ஆம் ஆண்டின் அறிக்கையின்படி புதிய தொற்றுகள் 13 லட்சமாக, கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”H.I.V.யைத் தடுக்க அதற்கான நடவடிக்கைகளை சரியான முறையில் எடுத்தால் மட்டுமே அனைவரையும் பாதுகாக்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
H.I.V சிகிச்சையில் முன்பைவிட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு ஊசி மூலம் ஆறு மாதங்கள் வரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்றும், ஆனால் ஆண்டுக்கு இரு ஊசிகளுக்கு ஆகும் செலவு இந்திய மதிப்பில் ரூ.33 இலட்சம் வரை ஆகுமென்று ஐ.நா எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநர் சிசர் நுனெஸ் கூறியுள்ளார்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் இந்த மருந்துகளைக் குறைவான வருமானம் கொண்ட நாடுகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.