உயர் அரச அதிகாரி ஒருவர் இராஜினாமா!
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சி.பி.அத்தலுவாகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தலுகே “அத தெரண” வினவிய போது குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரின் தன்னிச்சையான தலையீடு மற்றும் தேவையற்ற செல்வாக்கு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தலுகே தெரிவித்தார்.
கடந்த காலங்களில், இந்த முறையற்ற அழுத்தங்கள் மற்றும் குறுக்கீடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும், தற்போது, நிறுவனத்தின் உயர் நிர்வாகத்தின் மீது நேரடியான செல்வாக்கு செலுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளில் தலையீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கரை வருட சேவைக் காலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையிலும், ஊழியர்களின் முன்னேற்றத்திற்காகவும் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் தனது கடமைகளை நிறைவேற்றியதாக அத்தலுகே தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அதிகாரியின் கீழ் கடமையாற்ற விருப்பம் இல்லை என்பதால், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.