உலகின் மிக ஆபத்தான வீடு இது..!
“கிளிஃப் ஹவுஸ்” என்று பெயரிடப்பட்ட இந்த வீடு ஓர் ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட ‘கண்ணாடி மாளிகை’ அல்லது ‘மாடுலார் ஹோம்’ எனலாம்.
இது ஒரு மலைப்பாறை குன்றின் ஓரத்தில்
கடலுக்கு நேர் மேலே செங்குத்து பாறையோடு ஒட்டியபடி ஆணியில் அறையப்பட்டு அந்தரத்தில் தொங்க வைக்கப்பட்டு இருக்கிறது.
பரபரப்பான கடல் காட்சிகளை ரசித்தபடி கப்பலின் மேல் தள அறையில் இருப்பதை போன்ற ஒரு சாகச வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் வகையில் சுற்றிலும் கண்ணாடி சுவர்கள் மூலம் இவ்வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீட்டின் பிடிமான நிலைத்தன்மைக்காக இரும்பு எஃகு ஆணிகளால் பாறைக்குள் குடைந்து நங்கூரமிடப்பட்டுள்ளது. அதாவது வீட்டின் அஸ்திவார பில்லர்கள் மற்றும் பீம்கள் எல்லாமே சைடு வாக்கில் செருக்கப்பட்டுள்ளன..!
இந்த ஐந்தடுக்கு மாடி வீடு மூன்று படுக்கையறைகள், ஒரு சாப்பாட்டுக்கூடம் மற்றும் ஒரு சமையலறை ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது,
வீட்டின் மொட்டை மாடியில்தான் நுழைவாயில் மற்றும் கார் பார்க்கிங் போர்டிகோ அமைந்துள்ளது.
அங்கிருந்துதான்… உள் நுழைந்து ஒவ்வொரு தளமாக கீழிறங்கிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு தளமும்… லிஃப்ட் மற்றும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டின் வடிவமைப்பு… இயற்கையுடன் ஒன்றென கலக்கவும், கடலுடனான தொடர்பை அதிகப்படுத்தவும், சுற்றிலும் கண்ணாடி சுவர்களை பயன்படுத்தி… அங்கே புதிதாய் தங்க வரும் சுற்றுலாவாசிகளுக்கு அதிர்ச்சியூட்டும் காட்சிகளை எப்போதும் முன்னிலைப் படுத்தி… வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வீடு… ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தின் ப்ரூக்ளின் அருகில் உள்ள கடற்கரையில் கட்டப்பட்டுள்ளது… ம்ஹூம்… தொங்கவிடப்பட்டுள்ளது.
“வீடு” என்பது… படுத்தால் நிம்மதியான உறக்கம் தர வேண்டும். இப்படியொரு “கிளிஃப்ஹேங்கர்” வீட்டில்… படுத்தால் இரவில் நிம்மதியாக தூங்க முடியுமா… என்று தெரியவில்லை…