7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் எகிப்திய வீராங்கனை ஒருவரின் திறமைமிகு பங்குபற்றலானது பேசுபொருளாகியுள்ளதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், எகிப்து நாட்டு வாள்வீச்சு வீராங்கனை நாடா ஹபீஸ் (Nada Hafez) 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ள அவர்,
“களத்தில் இருந்தது 2 பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது 3 பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்னை, மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குழந்தை” என்று தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் தனிநபர் பெண்கள் வாள்வீச்சு போட்டிகளில் முதலில் அமெரிக்க வீராங்கனை எலிஸபத் ட்ரக்கோவ்ஸ்க்கியுடன் மோதி வெற்றி பெற்ற நாடா ஹபேஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று தென்கொரிய வீராங்கனை ஜியோன் ஹயோங் (Jeon Hayoung) உடன் மோதிய நாடா ஹபேஸ் 15-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.