பங்களாதேஷ் சிறையிலிருந்து 500 கைதிகள் தப்பியோட்டம்.
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டு இருந்தார். எனினும், இதற்கான நடவடிக்கைகள் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இதனிடையே, கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 518 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறைச்சாலை இந்தியா-வங்காளதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லை பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படையானது (பிஎஸ்எஃப்) எல்லையில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் பாதுகாப்புப் பணியை அதிகரித்துள்ளது. தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.