ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் சற்று முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் அந்த நிலையில் இருந்து காப்பாற்றி திறமையை நிரூபித்ததன் காரணமாக தமக்கு யாருடனும் போட்டி இல்லை எனவும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்து தான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஊடக பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிலரினால் ஊழலைப் பற்றிப் பேச மட்டுமே முடியும். ஆனால் ஊழலைத் தடுப்பதற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளதாகவும், குற்றச் செயல்களால் சம்பாதித்த சொத்து தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊடகப் பிரதானிகளுடான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுள்ள எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.