சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் தியாகத்தை அரசாங்கம் மறந்துவிட்டது ; எதிர்க்கட்சித் தலைவர்!
எமது நாட்டில் சிவில் பாதுகாப்புத் துறையில் நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். சுமார் 32000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். யுத்த வெற்றிக்காக இவர்கள் செய்த தியாகத்தை இன்று பலர்ந்துவிட்டுள்ளனர். இப்படைப் பிரிவினர்கள் ஆற்றி வந்த சேவையை 30 இலட்சம் ரூபாவாக மதிப்பிட்டுள்ளனர். நாட்டின் இராணுவ வீரர்கள் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம உள்ளிட்ட குழுவினருடனான கலந்துரையாடலொன்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சிவில் பாதுகாப்பு படையை பலப்படுத்தி, அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, முற்போக்கான வேலைத்திட்டமொன்றை நாம் முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் .
தானாக முன்வந்து சேவையை விட்டு வெளியேறுபவர்களுக்கு நியாயமான இழப்பீடும், உரிய மரியாதையும் வழங்கப்பட வேண்டும். யாரும் தமது அதிகாரத்தால் அவர்களை நீக்கக் கூடாது.
யாருக்கும் பாதகம் ஏற்படா வகையில், நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் புதிய முறைமையொன்று பின்பற்றப்படும்.
இந்தத் துறையை பெறுமதிமிக்க வளமாக மாற்றுவதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இவர்களின் கூடிய பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் வகையிலான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பேன் என்றார் .