போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடமளிக்க முடியாது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஒத்துழைப்பது ஜனாதிபதி என்ற வகையில் தனதும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (13) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் எந்த வகையிலும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட நடவடிக்கை மையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கௌரவமாக வரவேற்கப்பட்டார்.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, விசேட அதிரடிப் படைக் கட்டளை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி, படையினரின் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தற்போதைய தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கினார்.
இந்த கட்டளை மையம் பொது ஒழுங்கு முகாமைத்துவம் மற்றும் மோட்டார் சைக்கிள் குழுவில் பிரதான மையமாக செயல்படும்.
பயங்கரவாத மற்றும் வன்முறை, தீவிரவாத தாக்குதல்கள், வன்முறை ஏற்படுத்தும் எதிர்ப்புகள், பணயக்கைதிகள் தொடர்பான விடயங்கள் மற்றும் ஏனைய நெருக்கடிகள் உட்பட பல்வேறு அவசரநிலைகளை கையாளும் பொறுப்பு இந்தப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.