விளையாட்டு

இலங்கை – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை வெளியீடு.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை வருகிறது. அதன்படி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடையில் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது . 

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செப்டெம்பர் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 18ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டியானது, புதன், வியாழன், வெள்ளி என முதல் மூன்று நாட்கள் நடைபெறும். எனினும் 21 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது அதன் காரணமாக அன்றைய நாளில் போட்டி நடைபெறாது என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையும், ஐந்தாவது நாள் ஆட்டம் திங்கட்கிழமையும் நடைபெற உள்ளமை விசேட அம்சமாகும். 

இரண்டாவது போட்டி செப்டெம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி, தற்சமயம் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை மென்செஸ்டரில் ஆரம்பமான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 6ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாடு திரும்பும் இலங்கை அணி அடுத்து நியூசிலாந்து அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

அதன் அடிப்படையில் இலங்கை அணி குறிப்பிட்ட இரு மாத இடைவெளிக்குள் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 5 போட்டிகளில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து போட்டிகளும் இலங்கை அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. 

இதேவேளை குறித்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிம் சௌதி அணித்தலைவராக செயற்படவுள்ளதோடு கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய முக்கிய வீரர்கள் 15 பேர் கொண்ட நியூசிலாந்து குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

நியூசிலாந்து குழாம்: டிம் சௌதி (தலைவர்), டொம் பிளன்டல் (வி.கா.), மைக்கல் பிரேஸ்வெல், டெவோன் கொன்வே, மட் ஹென்ட்ரி, டொம் லதம் (உப தலைவர்), டரில் மிட்சல், வில் ஓருக், அஜே பட்டேல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்திரா, மிட்சல் சான்ட்னர், பென் சீர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *