உள்நாடுவணிகம்

ரூபாவின் பெறுமதியை மேலும் உயர்த்துவேன்! பொதுமக்களுக்கு ரணில் வழங்கியுள்ள உறுதி.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் போது டொலர் ஒன்றின் பெறுமதி 370 ரூபாவாகும். தற்போது 300 ரூபா வரை குறைந்துள்ளது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. இன்னும் குறைக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதனை ஏற்றுக் கொள்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மக்கள் உணவு இல்லாமல் இருந்தார்கள். விவசாயம் செய்ய முடியாமல் இருந்தார்கள். உரம் இருக்கவில்லை. எரிபொருள் இருக்கவில்லை. டீசல் இருக்கவில்லை. விவசாயம் செய்ய முடியாது. வாகனம் ஓட்ட முடியாது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. உணவு, மருந்துகள் இருக்கவில்லை. மக்கள் கஷ்டத்தில் வாழ்ந்தனர்.

நான் ஜூலை மாதம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது உரத்தை வழங்கி விவசாயம் செய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். ஐந்து போகங்களும் விதைக்கப்பட்டன. ஒரு முறைகூட கைவிடப்படவில்லை. வயலையும் நிரப்பினோம். சமையல் அறையும் நிரப்பினோம். இதுதானே மக்களின் தேவை.

எரிபொருள் வழங்கினோம். மருந்துகள் இருக்கின்றன. தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது. சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். வியாபாரமும் தடையின்றி நடக்கிறது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. இன்னும் குறைக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதனை ஏற்றுக்கொள்கிறேன்.

மட்டக்களப்பில் மட்டும் 80 சதவீத வாக்கு ரணிலுக்கு
மட்டக்களப்பில் மட்டும் 80 சதவீத வாக்கு ரணிலுக்கு
மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இன்னும் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். ரூபாவை வலுப் பெறச் செய்ய வேண்டும். நான் பொறுப்பேற்கும் போது டொலர் ஒன்றின் விலை 370 ரூபாவாகும். தற்போது 300 ரூபா வரை குறைந்துள்ளது.

மொத்த தேசிய உற்பத்தி 2019ஆம் ஆண்டு 89 பில்லியன் டொலர்களாக இருந்தது. ஆனால் நான் பொறுப்பேற்ற போது 76 பில்லியன் டொலர்களாக குறைந்திருந்தது.

ஆனால் 2023ஆம் ஆண்டின் இறுதியில் அது 84 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. எமது மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்து, பணவீக்கம் குறைந்து பொருட்களின் விலைகளும் குறைந்தன. இன்னும் நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளீர்கள். அதனை எப்படி வழங்கலாம்?.

தேசிய உள்நாட்டு உற்பத்தியை 89 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டும். பணவீக்கத்தை 9 வீதமாக குறைக்க வேண்டும். ரூபா அப்போது இன்னும் வலுப்பெறும். ரூபா வலுப்பெற்றால் அதிக பொருட்களை வாங்க முடியும். மொத்த தேசிய உற்பத்தியை 92 பில்லியன் டொலர்களாக உயர்த்தினால் ரூபா மேலும் வலுப்பெறும். பொருட்களின் விலைகள் குறையும்.

யாருக்கு இந்த இலக்கை அடைய முடியும்? உள்நாட்டு உற்பத்தியை யாருக்கு அதிகரிக்க முடியும். சஜித்தினால் முடியுமா? அநுரவிற்கு முடியுமா? அவர்களால் முடியாது. எதற்காக வாக்கு கோருகின்றனர். அவர்கள் நேரத்தை வீணடிக்காது வீட்டில் இருக்க வேண்டும்.
வாய்ப்பு கொடுத்த போது ஓடிவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமா? மக்கள் கஷ்டப்பட்டபோது தப்பியோடிவிட்டார்கள். எனக்கு ஒரேயொரு ஆசனம் தான் இருந்தது.

எனினும், மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனால் நான் இதனை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி இதனை ஏற்றுக்கொண்டேன். எமது வீடுகளிலும் குறைபாடுகள் இருந்தன. ஆனால் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *