இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை ? இரண்டாவது டெஸ்ட் இன்று லண்டனில் ஆரம்பம்.
தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான சுற்றுலா இலங்கை அணிக்கும், ஒல்லி போப் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு லண்டனில் அமைந்துள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இங்கிலாந்துக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. கடந்த 21ஆம் திகதி மென்செஸ்டரில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் வெற்றியீட்டி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
2023 – 2025 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் அதிகபடியாக 14 ஆட்டங்களில் ஆடியுள்ள இங்கிலாந்து இலங்கையுடன் பெற்ற வெற்றியுடன் 7வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு முன்னேறியது. மாறாக இலங்கை 5வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.
இலங்கை – இங்கிலாந்து அணிகள் இதுவரையில் 37 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இலங்கை அணி வெறும் 8 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
இரு அணிகளுக்கும் இடையில் இறுதியாக நடைபெற்ற 7 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி 7 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை அணி இறுதியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் வெற்றியீட்டிய பின்னர் 9 ஆட்டங்களில் ஒரு சமநிலையுடன் 8 தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் படி இலங்கை அணி கடந்த 10 ஆண்டுகளாக இங்கிலாந்துடன் டெஸ்ட் வெற்றியை சுவைக்கவில்லை.
எனவே இன்று ஆரம்பமாகும் போட்டியை இலங்கை அணி வென்று 10 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்யுமா என்பதுடன் முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். மூன்றாவது போட்டி செப்டம்பர் 6ஆம் திகதி த ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.