உள்நாடு

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை (04) ஆரம்பமாகவுள்ளன.

மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், சிறப்பு அதிரடிப் படை முகாம்கள், சிறப்பு பொலிஸ் பிரிவுகள் மற்றும் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளை தபால் மூலம் தனது வாக்கினை அடையாளப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளைய தினத்திற்கு மேலதிகமாக குறித்த இடங்களில் 6ஆம் திகதியும் தபால் வாக்குகளை அடையாளப்படுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

தபால் வாக்குகளை குறித்த திகதிகளில் அடையாளப்படுத்த முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில், எதிர்வரும், 11, 12ம் திகதிகளில், தபால் வாக்குகளை அடையாளப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 712,319 தபால்மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களாக 76,977 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை வாகனங்களில் ஒட்டுவது சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறான வாகனங்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *