அரச, தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது, அரச மற்றும் தனியார்த் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறை வழங்காத நபர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்குமாயின் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வேதனம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்காளர்களுக்கு, தமது வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் அலுவலர்களுக்கு, விசேட விடுமுறை தொடர்பான தாபன விதிக்கோவையில், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தொடர்ச்சியாக 4 மணிநேரம் தேவை என்பதால், அன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் தனியார்த்துறை ஊழியர்களுக்கு அவ்வாறான எழுத்து மூல கட்டளைகள் இன்மையினால், மனித உரிமை ஆணைக்குழு, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் என்பன தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கடந்த காலங்களில் ஏற்படுத்திய உடன்பாட்டுக்கு அமைய, இந்த தேர்தலிலும் அதனைக் கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.