உள்நாடு

கொழும்பு பேராயரை சந்தித்தார் ஜனாதிபதி!

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநு ரகுமார திசாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். இது பொறுப்பு வாய்ந்த மற்றும் கடினமான பணியாக இருக்கலாம். அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் மற்றும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தை தயார் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி தனக்கு உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

கொழும்பு உயர் மறைமாவட் துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, ஜே.டி. அந்தோணி ஆண்டகை, அன்டன் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, கொழும்பு பேராயரின் செயலாளர் அருட்தந்தை ஜோசப் இந்திக்க, பொருளாளர் அருட்தந்தை ஜூட் சமந்த பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *