உள்நாடு

ஜனாதிபதி, பிரதமரை நோக்கிச் செல்லும் தபாலட்டைகள்!

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கைக்கு அமைவாக மக்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தபாலட்டைகள் நேற்று (01) செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் தபாலகத்தில் அஞ்சல் செய்யப்பட்டது.

மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன்பிகிராடோ தலைமையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மன்னார் தீவு பகுதியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மக்களிடம் தபாலட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வந்தனர்.

மன்னார் தீவில் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வர்களிடமும் கோரிக்கைகளை முன் வைத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு குறித்த திட்டத்தின் பாதகத்தையும் இத் திட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை வலியுறுத்தும் வகையிலும் கொழும்பில் உள்ள அலுவலகங்களுக்கு மக்களின் கோரிக்கை அடங்கிய தபால் அட்டைகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது.

புதிய ஜனாதிபதி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது மன்னார் தீவில் அமைக்கப்படும் காற்றாலை மின்சார திட்டத்தை தான் ஜனாதிபதியாக வந்தால் குறித்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தார்.இந்த நிலையில் இதனை வலியுறுத்தும் வகையிலும் குறித்த தபாலட்டை அனுப்பி வைக்கப்படுகிறது.

மக்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை அடங்கிய தபாலட்டைகள் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் சேகரிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான தபாலட்டைகள் மன்னார் தபாலகம் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *