உள்நாடு

அலங்கரிப்பின் போது உதிர்ந்த பெண்ணின் முடி ; அழகு கலை நிலையத்தின் உரிமையாளர் பிணையில் விடுதலை.

அலங்கரிப்பின் போது பெண்ணின் முடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் உரிமையாளர் நேற்று (02) தனது சட்டத்தரணியுடன் மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் திருமண நிகழ்வொன்றுக்கு செல்வதற்காக தனது தலை முடியை அழகு படுத்த அழகு கலை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, மினுவாங்கொடை நகரத்தில் உள்ள அழகு கலை நிலையத்தின் பணிப்பெண்கள் இந்த பெண்ணின் தலைமுடியில் கிரீம் வகைகளை பூசியுள்ளனர். இதன்போது, இந்த பெண்ணின் தலைமுடிகள் திடீரென உதிர்ந்து விழுந்துள்ளன.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பின்னர், சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், அழகு கலை நிலையத்தின் உரிமையாளரும் இரண்டு பணிப்பெண்களும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், ஒரு பணிப்பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் உரிமையாளர் நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *