நவ. 30 இற்கு முன் வரி நிலுவை செலுத்தாத மது நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது.
2023/ 2024 ஆம் ஆண்டுக்கான வரி நிலுவையை இந்த வருடம் நவம்பர் மாதம் 30 இற்கு முன்பதாக செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்களுக்கு, அடுத்த வருடத்துக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில்லை என, கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ரூ. 1,800 கோடி இவ்வாறு வரி நிலுவையாக அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த வரி நிலுவையை செலுத்தாதவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படமாட்டாது என்றும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
கலால் வரி திணைக்களமானது அதன் வருமான இலக்கு, அதனை அடைவதற்கான வேலைத் திட்டம், அதில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் அதற்கு தீர்வு காணும் வகையிலான செயற்பாடுகள் ஆகியவை தொடர்பில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதுபான உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவது சம்பிரதாயமாகும்.
இந்த வருடத்திற்காக மேற்கொள்ளப்படும் நான்காவது மீளாய்வு நேற்றைய தினம் இராஜகிரியவிலுள்ள கலால் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் நாடளாவிய ரீதியிலுள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
திணைக்களத்தின் நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் அழுத்தம் அல்லது தலையிடலை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திய அவர்,அந்த வகையில் முறையாகவும் வினைத்திறனுடனும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம், உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுபான உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தெளிவுபடுத்தியுள்ள கலால் வரி ஆணையாளர் நாயகம், கள்ளு மற்றும் சக்கே வகை மதுபான உற்பத்திக்காக புதிய ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக ஏனைய உற்பத்திகளுக்கான அந்த வேலைத் திட்டம் அடுத்த வருடம் முதல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.