உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை என தகவல் வௌிக்கொணரப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் பரீட்சையை மீள நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்குக் கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இக்குழு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்தாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சை மீள நடத்துவதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கசிந்ததாகக் கருதப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *