ஏற்கனவே கொழும்பில் உள்ள அடுக்குமாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியே நேற்று தாமரை கோபுரத்தின் மேலிருந்து குதித்தவர்.
நேற்று (07) மாலை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் படித்து வருவதும், பாடசாலை முடிந்து தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியான இவர், குறித்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது தந்தை பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சடலம் திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.