கட்டுகுருந்த ரயில் விபத்து தற்கொலையா?
களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த ரயில் நிலையத்தில் நேற்றிரவு (12) ரயிலில் மோதுண்டு மூவர் உயிரிழந்த சம்பவம் தற்கொலையாக இருக்குமா, என்பது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர்.
நேற்று (12) இரவு பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் மோதி குறித்த மூவரும் உயிரிழந்தனர்.சம்பவத்தில் களுத்துறை – நாகொட – வெனிவெல்கெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய தந்தையும் அவரது 01 வயது 10 மாத மகன் மற்றும் 49 வயதுடைய மற்றொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தின் இரண்டாவது மேடையில் காத்திருந்த போது தந்தையும் மகனும் விபத்தை சந்தித்துள்ளதுடன், தடுக்க முயன்ற 49 வயதுடைய அயலவர் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பெரியவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, குழந்தை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
களுத்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது உயிரிழந்த 21 வயதுடைய நபர் தற்கொலை செய்து கொள்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஆண் குழந்தையுடன் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.அவர் போதைக்கு அடிமையானவர் என்றும், அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.