16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது
யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 லட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 ஆம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றைத் திருடிவிட்டு தப்பித்திருந்தனர்.
கணவன் – மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு அது தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருட்டுச் சந்தேகநபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட ஐவரைக் கைது செய்துள்ளனர்.