வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் பாதிப்பு?
அரசாங்க வைத்தியசாலையில் காணப்படுகின்ற நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் இலங்கையில் 8க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் நிறைவுகாண் மருத்துவ சேவைக்கு தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக CT ஸ்கேனர், MRI ஸ்கேனர் மற்றும் இதய வடிகுழாய் அலகுகளில் பல பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
“சில மருத்துவமனைகளில் புதிய CT ஸ்கேன் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.ஆனால் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் முடியாதுள்ளது.
அதேநேரம், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிகளவில் பணி செய்ய வேண்டியுள்ளதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக புதிய சுகாதார அமைச்சரை இந்த சேவைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையெனில், அடுத்த சில மாதங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சேவை வீழ்ச்சியடைவதை தவிர்க்க முடியாது” என்றார்.