சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் இருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய விமானமொன்று வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தியாவின் விஸ்தாரா விமான சேவைக்குச் சொந்தமான குறித்த விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக, விமானிக்கு வந்த அநாமதேய அழைப்பினூடாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்த அச்சுறுத்தல் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த விமானம் தரையிறக்கப்பட்டு அதிலிருந்த 96 பயணிகளும் 8 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
குறித்த விமானத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.