உள்நாடு

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகுபடுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) முற்பகல் நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கையை இலகுவாக்கும் வகையில் மாகாண சபைகளினால் சாத்தியமான அனைத்து பொருளாதார மற்றும் சமூக தலையீடுகளையும் மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிப்பதற்காகக் கிடைத்துள்ள மக்கள் ஆணையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்பை பாதிக்காத வகையில் செயற்படுமாறும் வலியுறுத்தினார்.

அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை ஒதுக்கி தரமான அரச சேவைக்கு தம்மை அர்ப்பணிக்குமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது வடக்கு கிழக்கு காணிகள் தொடர்பாகவும் மாகாண சபை நிதிப் பயன்பாடு தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது.
கந்தளாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *