மீண்டும் தலைதூக்கிய புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வௌியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் இருந்து குறித்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த தினம் முடிவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியில் மூன்று கேள்விகள் முன்னதாகவே வௌியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தீர்வாக, முன்னதாகவே வௌியிடப்பட்டதாக கூறப்படும் 03 வினாக்களுக்கு பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க அதிகாரிகள் தீர்மானம் எடுத்துள்ளதுடன், இதன் காரணமாக பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு பாதகமான நிலை ஏற்படக் கூடும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நடவடிக்கை ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு அவர்கள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
மேலும், முன்னரே வௌியிடப்பட்டதாக கூறப்படும் மூன்று வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்குவதற்கான தீர்மானத்தை இரத்துச் செய்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர். .