BREAKING NEWS<<<அறுகம்பே சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை – அமெரிக்கத் தூதரகம்.
மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளமையினால் முன்னெச்சரிக்கையாக இந்த பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.
எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய கிழக்கு உட்படக் கிழக்கு ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள யுத்தத்தைக் கருத்திற்கொண்டு, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பன அறிவுறுத்தியுள்ளன.
இதன்படி, எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பில் 1997 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்க முடியும் என காவல்துறை ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.