தாக்குதல் நடத்தப் போவதாகக் கடிதம் – மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பதற்றநிலை!
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றமையை அடுத்து இன்று (25) அங்கு பதற்றநிலை காணப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதுடன், அங்குப் பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவவிடம் வினவியது.
அதற்குப் பதிலளித்த அவர், குறித்த கடிதம் போலி முகவரி ஒன்றிலிருந்து இனந்தெரியாதோரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும் தாக்குதல் தொடர்பில் வேறு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
அங்கு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதியின் வழமையான செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் அந்த கடிதம் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.