துப்பாக்கி தயாரித்த இடம் சுற்றிவளைப்பு
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலட்டுவ பிரதேசத்தில் ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி, 9 மில்லி மீற்றர் 05 ரவைகள், 01 வெல்டிங் இயந்திரம் மற்றும் உபகரணங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 63 வயதுடைய பாலட்டுவ, மாலிம்பட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்வாறு தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகள் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அஹங்கம பொலிஸ் பிரிவில் விற்பனை செய்யப்பட்ட 02 துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்களை மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம பிரதேசத்தை சேர்ந்த 47 மற்றும் 54 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.