மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட பரிசோதனை
மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இன்று (25) காலை குறித்த வளாகத்தில் விசேட சோதனையினை மேற்கொண்டுள்ளனர்.
ஒக்டோபர் 24, 25 அல்லது 28 ஆகிய மூன்று நாட்களில் ஏதாவது ஒன்றில் மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என குறித்த கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதங்கள் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு நீதிவான் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று காலை மட்டக்களப்பு பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த வளாகத்தை சோதனையிட நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறுகையில், குறித்த வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
குறித்த கடிதங்கள் மட்டக்களப்பு தபால் நிலையத்தில் இருந்து பதிவுத் தபாலுக்கு அனுப்பப்பட்டவை எனவும், கடிதங்களை அனுப்பிய தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.