எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று!
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.
48 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்குப்பதிவு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
28 உறுப்பினர்களைக் கொண்ட எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இந்த முறை 8 கட்சிகள் போட்டியிடுகின்றன.
அத்துடன் சுயேட்சை குழுவொன்றும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக 55 ஆயிரத்து 643 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சிறுவிரலில் அடையாளம் இடப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலின் போது சிறுவிரலில் இடப்பட்ட மை, இன்னும் சிலருக்கு நீங்காத நிலையில், தற்போது ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.