அறுகம்பையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறைவு?
அறுகம் வளைகுடா சுற்றுலா வலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வழக்கத்திற்கு மாறான எந்தக் குறைவும் இல்லையென்றாலும், தற்போது பருவ காலம் இல்லையென்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக பிரதேசவாசிகளும் குறித்த பகுதி சுற்றுலாத்துறை சார் தொழிலாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பயண ஆலோசனையைத் தொடர்ந்து அப்பகுதியை விட்டு வெளியேறிய போதிலும், தற்போது பருவ காலம் இல்லையென்றாலும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அறுகம் வளைகுடா சுற்றுலா வலயத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சமீபத்திய தகவல் அப்பகுதி பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கவில்லை.
அப்பகுதியில் மீன்பிடித் தொழில் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியடைந்து வருவதாக சுற்றுலா குறித்த பகுதியின் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரான கே.எச்.சந்திரசேனா என்ற “சுதுமஹத்தாயா” கூறினார்.
தற்போது இப்பகுதியில் சுற்றுலா பருவ காலம் முடிந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் விடுதி வசதிகள் கிடைக்கும் என அவர் கூறினார்.
இதேவேளை, குறித்த பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அம்பாறை பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என்.ஜெயபத்ம தெரிவித்தார்.