Health

மச்சம் புற்றுநோயின் அறிகுறியா?

மச்சம் என்றாலே அதனால் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று நினைப்பது சகஜம்தான். ஆனால், உங்களுடைய மச்சம் அளவில் வளர்ந்து, தோற்றத்தில் ஏதேனும் மாற்றம் உண்டானால் நிச்சயமாக அது சரிபார்க்க வேண்டிய ஒரு விஷயம். இவை புற்றுநோய் மச்சங்களுக்கான சில அறிகுறிகள். அனைத்து மச்சங்களும் புற்றுநோய் மச்சங்களாக மாறுவது கிடையாது. ஆனால், ஒருசில மச்சங்கள் சரும புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.

அதனை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதற்குத் தேவையான சிகிச்சைகளைப் பெறுவது அதனால் ஏற்படும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு உதவும். ஒரு மச்சம் புற்றுநோய் மச்சமா என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள் உள்ளன. ஒரு மச்சம் அதன் நிறம் மற்றும் அளவில் மாறுபட்டால் அது புற்றுநோய் மச்சமாக இருப்பதற்கு சாத்தியங்கள் அதிகமாக உள்ளது.

புற்றுநோய் மச்சங்கள் என்றால் என்ன?

சரும புற்றுநோய் என்பது சரும செல்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. மெலனோமா மற்றும் நான் மெலனோமா. தோலில் மச்சங்கள் இருப்பது பொதுவானது மற்றும் பெரும்பாலான நேரங்களில் அவற்றால் தீங்கு எதுவும் ஏற்படாது. ஆனால், ஒருசில சமயங்களில் ஒரு மச்சம் அதன் தோற்றத்தில் மாற்றமடைந்து புற்றுநோய் மச்சம் அல்லது மெலனோமாவாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

மெலனோமா என்பது தோல் புற்றுநோயின் ஒரு வடிவமாகும். இது விரைவாக பரவும் ஒரு புற்றுநோய். இதன் காரணமாக இதனைக் கண்டுபிடிப்பது மற்றும் அதற்கான சிகிச்சை வழங்குவது சிக்கலாக அமைகிறது.

புற்றுநோய் மச்சங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

புற்றுநோய் மச்சங்கள் அல்லது மெலனோமா ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னணியிலுள்ள சரியான காரணத்தைப் புரிந்துகொள்வது சற்று சிக்கலானது. செல் DNA சேதமடையும்போது புற்றுநோய் மச்சங்கள் ஏற்படலாம். மேலும் ஜீன் மியூட்டேஷன்கள் காரணமாகவும் புற்றுநோய் மச்சங்கள் உருவாக வாய்ப்புள்ளது. அல்ட்ரா வயலட் கதிர்கள் DNAவை சேதப்படுத்தி அதன் விளைவாக புற்றுநோய் மச்சங்கள் உருவாகலாம்.

புற்றுநோய் மச்சங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

* வழக்கத்துக்கு மாறாக தோற்றமளிக்கும் ஒரு புண். 

* அரிப்பு அல்லது அதிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படுதல். * பிங்க் அல்லது சிவப்பு நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும் ஒரு புண். *தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் சிறிய கட்டி. * அரிப்பு மிகுந்த சிவப்பு நிற திட்டுகள். * புதிதாகத் தோன்றும் மச்சம். * தோலில் வடு போன்ற திட்டுகள்.

இது மாதிரியான அறிகுறிகளை நீங்கள் கவனித்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம். நூற்றுக்கும் மேற்பட்ட மச்சங்கள் இருக்கும் நபர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பெரிய மச்சம் இருப்பவர்களும் அடிக்கடி அந்த மச்சத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *