பகல் நேரத்தில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்-தீமைகள்
தற்போதைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் இரவுநேரங்களில் வேலை செய்துவிட்டு, பகல்நேரங்களில் உறங்குவது மற்றும் பகல்நேரத்தில் 12 முதல் 14 மணிநேரம் வேலை செய்துவிட்டு உறங்காமல் இருப்பதென இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களது மூளை மற்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் சோர்வடையும்.
கிட்டத்தட்ட 24 மணிநேரம் கொண்ட ஒரு நாளில் 12 முதல் 14 மணிநேரம் வரை உழைப்பவர்கள் மூளைக்கு அதிக வேலையைக் கொடுக்கும் பணி செய்பவர்களாவர். இவர்கள் பகல்நேரத்தில் உறங்கலாம்.
ஆனால், அதிக நேரம் உறங்காமல் குட்டித்தூக்கம் போடுவதன் மூலம் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். காலை எழுந்ததிலிருந்து மூளைக்கு தொடர்ச்சியாக வேலை கொடுப்பதன் மூலமாக மூளை சோர்வடைந்து விடுகிறது.
இதனால் மூளையை ஆஸ்வாசப்படுத்த குட்டித்தூக்கம் போடுவதால் சுறுசுறுப்பைத் தருகிறதென பல ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலிபோர்னிய பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட நபர்களை இரவுநேரங்களில் சிலரையும், பகல்நேரங்களில் சிலரையும் ஒன்றரை மணிநேரம் உறங்க வைத்தது.
இந்த ஆய்வின் முடிவில் இரவுநேரங்களில் உறங்கியவர்களை விட, பகல்நேரங்களில் உறங்கியவர்களின் மூளை செயற்பாட்டுத்திறன் வேகமாக இருந்தது. அவர்களது அறிவுத்திறன் அதிகமானதைக் கண்டு பகல்நேர குட்டித்தூக்கம் குறித்து தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வுசெய்தது. அப்போது மூளைக்கு மட்டுமல்ல, இதயத்துக்கும், உடலின் உள்ளுறுப்புகளுக்கும் பகல்நேர குட்டித்தூக்கம் மிகவும் நன்மையளிக்கிறது என்று நிரூபணமானது.
இரவுநேரம் தூங்கினாலும் பகல் முழுவதுமாக வேலை செய்வதால் இதயமும், மூளையும் களைப்படைகிறது. இதனைப் போக்கும் வகையில் ஒரு குட்டித்தூக்கம் போட்டால் இதயத்துக்கும் ஆசுவாசமாக இருக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்த நோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்புப் பிரச்சினைகளும் வராமல் தடுக்க இயலும்.
சுமை தூக்கும் தொழிலாளிகள், அதிகப்படியான உடல் உழைப்புக்கொண்டவர்கள், உடல் வருத்தி வேலை செய்பவர்கள் மற்றும் ஓயாமல் வேலைசெய்யும் இல்லத்தரசிகள் கூட பகலில் குட்டித்தூக்கம் போடுவதால் மீதிநேரம் உற்சாகமாக இருக்க இயலும். இது குறித்த அனைத்து ஆய்வுகளும் பகல்நேரத்தில் உறங்குவது என்பது ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது என்றுதான் கூறுகிறது.
ஆனால், இரவு தூக்கம்போல் பகல்நேரத்தில் அதிகமாக உறங்கினால் உடல் ஆரோக்கியத்திற்கு கோளாறுகளைத் தரும். பகல்நேர குட்டித்தூக்கம் என்பது குறைந்தது 15 நிமிடங்கள் தொடங்கி 45 நிமிடங்களுக்குள் முடிந்துவிட வேண்டும். பணியில் இருப்பவர்கள் தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது மேஜையில் குட்டித்தூக்கம் போட்டால் அடுத்த ஐந்து மணிநேரம் அவர்கள் பணியைத் தடையின்றி சுறுசுறுப்புடன் செய்ய இயலும்.
ஒருவேளை பகல்நேரத்தில் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் உறங்கினால் அது உடலுக்குப் பலவிதமான கோளாறுகளைக் கொண்டுவந்து சேர்க்கும். இதனால் உடலில் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கச் செய்து மந்தமாக இருக்க வைக்கும். எனவே, அளவோடு உறங்கி எழுந்தால் எப்பொழுதும் நலமோடு வாழலாம்.