“தெளிவிற்கான மடல்” ஜனாஸா வாகன கொள்வனவு – சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை விளக்கம்!
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் ஆரம்பம் செய்யப்படவுள்ள ஜனாஸா நலன்புரித் திட்ட கட்டமைப்பு, வாகான கொள்வனவு விடயத்தில் பலரிடமும் எழுந்த கேள்விகளை மையப்படுத்தி கடந்த 10.12.2024ம் திகதி எமது ‘நியூஸ்ப்ளஸ்’ ஊடகம் சார்ந்து பிரதம ஆசிரியரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு கௌரவ உயர் சபையான நம்பிக்கையாளர் சபையின் காத்திரமான, பொறுப்பு வாய்ந்த பதிலை சபையின் செயலாளர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற குறித்த கடிதம் முழுவதுமாக இத்தால் பிரசுரிக்கப்படுகின்றது. 👇
“
சகோ. கியாஸ் ஏ. புஹாரி அவர்கள்,
பிரதம ஆசிரியர்,
NEWSPLUS,
சம்மாந்துறை.
2024.12.14
அன்புள்ளீர்,
அஸ்ஸலாமுஅலைக்கும்.
தெளிவிற்கான மடல்
மேற்படி தலைப்பில் நம்பிக்கையாளர் சபைக்கு தங்களால் அனுப்பப்பட்ட கடிதத்தினை மிக்க மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் பெற்றுக்கொண்டோம். இது தொடர்பான தங்களின் தெளிவான நிலைப்பாட்டிற்கு இந்த ஊர் மக்களின் சார்பில் எமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் தேசிய பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராக நீங்கள் செயல்பட்டு வருவதனையும் நாங்கள் பாராட்டுகின்றோம். நமது ஊரைப் பொறுத்தவரையில் நாடளாவிய பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராக மௌலவி அமானுல்லாஹ், பௌஸ்டீன் ஆகியோர் வரிசையில் நீங்கள் மூன்றாமவராக பிரகாசிப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
தாங்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக தங்களின் இலக்கமிடப்பட்ட வினாக்களுக்கு பின்வரும் பதில்களை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் வழங்குகின்றோம்.
1.சம்மாந்துறை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்கள் வாழும் ஊர் ஆகும். ஏற்கனவே இங்கு சங்கைக்குரிய முஸ்தபா மௌலவி (உஸ்வா) அவர்களை பிரதம முகாமையாளராகக் கொண்ட தொண்டர் சேவையும் சம்மாந்துறை பிரதேச சபையின் சேவை ஒன்றும் காணப்படுகின்றன. பிரதேச சபை வாகனம் மாவட்ட மட்டத்தில் பாவிக்கப்பட செயலாளர் அனுமதியும் மாகாணத்துக்கு வெளியே செல்வதற்கு CLG அனுமதியும் பெறப்படவேண்டியது அரச நிருவாக ஒழுங்காகும்.
அத்துடன் முஸ்தபா மௌலவி அவர்களின் சேவையை நிறுவனமயப்படுத்துவதும் அவசியமாகும். ஒரு தனிமனிதனின் மறைவின் பின்னர் அந்த சேவையை உறுதிப்படுத்த இந்தக் கட்டமைப்பாக்கம் அவசியமாகும். இதில் பல இடையூறுகளும் தாமதங்களும் ஏற்பட்டுவருகின்றன என்ற முறைப்பாடும் உள்ளது.
மேலும், இவை இரண்டு வாகனங்களும் இக்காலகட்டத்தின் போக்குவரத்து சௌகரியங்களுக்கு ஏற்ப தூர சேவைக்கும் தொழில்நுட்ப ஏற்பாடுகளுக்கும் பொருத்தமற்ற நிலைமையில் (Condition) உள்ள வாகனங்களாகக் காணப்படுகின்றன.
இதனால் கொழும்பு, யாழ்ப்பாணம் முதலிய தூர இடங்களில் ஏற்படும் நமது ஊரின் ஜனாஸாக்களை ஊருக்குக் கொண்டுவருவதில் பலத்த சிரமங்களும் வீண் காலதாமதங்களும் ஏற்படுகின்றன என்ற பொதுமக்களின் அபிப்பிராயங்களும் உள்ளன.
இதனால் தூர இடங்களில் ஏற்படும் ஜனாசாவையும் அதனைக் கொண்டு சேர்க்கும் பணியில் உள்ளவர்களையும் மற்றும் தொண்டர்களையும் கொண்டுவர ஏனைய ஊர்களில் இருப்பதுபோன்ற காலத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாகனம் ஒன்று அவசியம் என்பதை பலரும் வலியுறுத்துகின்றனர். அதன் வெளிப்பாடாக SEPO எனும் செயலூக்கம் கொண்ட அமைப்பு எம்மோடு தொடர்புபட்டது. அதன் ஒருங்கிணைப்புடன் நாம் மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பித்தோம்.
அது மட்டுமன்றி இலங்கை முழுவதும் ஒரு முகப்படுத்தப்பட்ட ஜனாஸா சேவை முறை ஒன்று காணப்படுகின்றது. உதாரணமாக நேர முகாமை கருதி யாழ்ப்பாணத்தில் மரணமான ஒருவரின் ஜனாஸாவை அங்குள்ள ஜனாஸா நிறுவனம் கொண்டுவர பாரம் எடுக்கும். ஆனாலும் அதனை இடைவழிக்குச் சென்று மாறிக்கொண்டுவரும் ஒரு சேவைமுறை (Kiss Moment’s) தற்போது அமுலில் உள்ளது. அத்தகைய ஒரு முகப்படுத்தப்பட்ட சேவையில் நாம் அங்கத்தவராக இருத்தல் அவசியம். இவ்வாறு நாடளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த சேவையில் ஒரு அங்கத்துவ நிறுவனமாக (Member Organization) நமது சேவை நிறுவனமும் இருக்கும் போதுதான் அதனை சீராக ஒருங்கமைக்க முடியும். பரிந்துரை செய்யப்பட்டதும் தொழிற்றுறை மயப்பட்டதுமான (Professional) ஒரு சேவையில் இலங்கையின் ஆக பெரிய முஸ்லிம் ஊர் பங்குபற்றி இருப்பது முஸ்லிம் உம்மா சார்ந்த ஒரு கடப்பாடாகும்.
2.தூர இடங்களுக்கான சேவைக்காக பள்ளிவாசலில் பரிபாலிப்பில் உள்ள ஜனாஸாவைக் கொண்டு வரும் சேவைக்கான தேவை முஸ்தபா மௌலவி அவர்களின் நிறுவனத்துக்குத் தேவைப்படும்போது அவரின் சேவையை மதித்து வாகனத்தைப் பெற்றுக்கொள்ளும் உரிமை குறித்த முஸ்தபா மௌலவி அவர்களுக்கும் வழங்கப்படும். அவர் அந்த சேவையில் முக்கிய பங்காளியாக அவரை பொறுப்புக்கூரளுடன் கூடிய சேவையாளராக மாற்றப்படவும் முடியும்.
3.குறித்த வாகனம் கொள்வனவு செய்யப்பட்டதும் அதற்கான நிரந்தமான கட்டமைப்பு உருவாக்கப்படும். அதன் பின்னர் ஊரில் இயங்குநிலையில் உள்ள சகல ஜனாஸா நலன்புரி அமைப்புக்களையும் உள்வாங்கி ஓர் இணைந்த சபையாக ஜனாஸா நலன்புரி உருவாக்கப்பட்டு முழு பராமரிப்பும் அவர்களிடம் கையளிக்கப்படும். அவர்கள் நம்பிக்கையாளர் சபைக்குப் பொறுப்புக்கூறுதல் வேண்டும். நம்பிக்கையாளர் சபை ஊருக்கும், வக்புச் சபைக்கும் பொறுப்புக் கூறுதல் அவசியமாகும்.
4.குறித்த ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு ஒரு அமைப்பு விதி தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிருவாகிகள் தெரிவு செய்யப்படுவர்.
5.குறித்த ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு அமைப்பு விதியின் அடிப்படையில் நிதி நிருவாகம் அமைந்திருக்கும். அதன் அறிக்கை நம்பிக்கையாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்படும். நம்பிக்கையாளர் சபை மஜ்லிஸ் அஷ் ஷூராவுக்கும், வக்புச் சபைக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருக்கும்.
6.வாகனத்தின் வகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
7.நிதிக் கையாளுகையில் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு SEPO எனும் அமைப்புக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்தத் தொண்டர் சேவை வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்களிப்புச் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இந்த நிறுவனத்துக்கு ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேலதிக விளக்கங்கள் தேவையாயின் நம்பிக்கையாளர் சபை தங்களுடன் கலந்துரையாட எவ்வித தடங்கல்களும் இல்லை.
வஸ்ஸலாம்.
அஷ்ஷேக். எம்.ஐ.எம். இஸ்ஹாக் (நழீமி),
கௌரவ செயலாளர்.
“
- என்னால் வழங்கப்பட்ட கடித்திற்கு மதிப்பளித்தும், ஊர் மக்களின் சந்தேகங்களுக்கு முன்னுரிமையளித்தும் பொறுப்புடன் பதில் வழங்கியுள்ள கௌரவ நம்பிக்கையாளர் சபையின் தலைவர் உட்பட அங்கத்தவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்! –
#
குறித்த விடையளிப்புக்கு கடந்த 2024.12.10 அன்று எம்மால் வழங்கப்பட்ட வினாக்கள் வருமாறு:
- ஊரில் நீண்ட காலமாக முஸ்தபா (உஸ்வா) மௌலவி ஜனாஸா சேவை செய்து வருகிறார், அவரிடம் வாகனமும் உள்ள நிலையில் ஏன் இவ்வாறான வாகன கொள்வனவு?
- இப்போது உதயமாகவுள்ள ஜனாஸா சேவையில் இவ்வளவு காலமும் இப் பணியை செவ்வனே செய்து வரும் முஸ்தபா மௌலவியின் வகிபாகம் என்ன?
- இது வெறும் வாகன கொள்வனவு மாத்திரமா? அல்லது ஊருக்கு பொதுவான தொடரான ஜனாஸா சேவை கட்டமைப்பா?
- அவ்வாறு ஜனாஸா சேவைத் திட்டம் கட்டமைக்கப்பட்டால் அதற்கு அனுபவமுள்ள தலைமைப் பொறுப்பு யாரிடம் வழங்கப்படும்?
- இந்த செயற்பாடுகளின் நிதி ஆளுகைத் தன்மை என்ன? நிதிச் சுழற்சி, அதன் வெளிப்படைத் தன்மை எவ்வாறு அமையும்?
- கொள்வனவு செய்யவுள்ள வாகனத்தின் வகை மற்றும் அதற்கான தகுந்த காரணங்கள்?
- இத் திட்டத்தில் SEPO அமைப்பு மாத்திரம் தானா அங்கத்துவம் பெற்றுள்ளது? ஊரிலுள்ள ஏனைய அமைப்புக்கள் இணைந்து கைகொடுக்க முடியுமா? அவ்வாறு முடிமென்றால் அதற்கான முறைமை என்ன?