சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா பகுதிகளில் பலத்த மழை
சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கடும் மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இப் பகுதிகளில் பெரும்பாலும் மழை பெய்வதில்லை. ஆனால் தற்போது அங்கு நிலைமை மாறிவிட்டது.
சமீபத்தில் பெய்த கடும் மழையால் மக்கா மற்றும் மதீனாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஜித்தா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மழையைத் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்தப் பெருமழை காரணமாக சவுதி அரேபியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கின. இன்றும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.மிதமானது முதல் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் புழுதிப் புயல் வரலாம் என்று அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்றுப் (07) பெய்த கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்உலா மற்றும் அல்-மதீனா பகுதிகளும் உள்ளடங்குகின்றன. வீதிகளிலுள்ள வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதனால் சவுதியில் பல இடங்களில் மக்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.