இஸ்ரேலுக்கு அனுமதியில்லை – பிரதமர் ஹரிணி
‘‘நாட்டில் இஸ்ரேல் பிரஜைகளினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மதஸ்தாபனங்களுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அந்த நிர்மாணங்களை நிறுத்துவதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்’’ என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,
‘‘நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை இஸ்ரேல், பலஸ்தீன் என இனரீதியாக நோக்க முடியாது. குறிப்பாக அறுகம்பே சம்பவங்களுக்குப் பின்னர் கிடைத்த புலனாய்வுத் தகவல்களுக்கமைய, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என கருதியே பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில் அது சுற்றுலாப் பயணிகளுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே தவிர அநாவசியமான மத ஸ்தாபனங்களுக்கான பாதுகாப்பு அல்ல. சுற்றுலாப் பயணிகளாக நாட்டுக்கு வருகை தரும் எவருக்கும் இங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்ட ரீதியாக எந்த அனுமதியும் கிடையாது.
எனினும், இஸ்ரேல் நாட்டவர் மட்டுமின்றி வேறு நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்து இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது. அதனை ஒரு பிரச்சினையாக நாம் இனங்கண்டுள்ளோம்.
அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவ்வாறான வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் முன்னெடுத்துள்ளோம்.
அத்துடன், நான் அறிந்த வகையில் வெளிநாட்டவர் இங்கு வந்து முதலீடுகள் அல்லது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் விசா வழங்கப்படுவதில்லை. அரசாங்கம் அதுபோன்ற எந்த நடைமுறைகளையும் முன்னெடுக்கவில்லை. எனினும் அதனை மீறி அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. அது தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்.
அத்துடன் 2020ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் உத்தியோகபூர்வ விசா அனுமதிப்பத்திரம் இல்லாமல் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களிலோ அல்லது வேறு தொகுதிகளிலோ தடுத்து வைக்கப்படவில்லை. எனினும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு சொந்தமான மிரிஹான முகாமில் விசா அனுமதிப்பத்திரமின்றி இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேல் பிரஜை ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேல் பிரஜைகள் மத வணக்கஸ்தலங்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய கட்டிடங்களை அமைப்பதற்கு இதுவரை புத்தசாசனம் மற்றும் கலாசார அமைச்சோ அல்லது வேறு எந்த நிறுவனமோ அனுமதிகள் எதனையும் வழங்கவில்லை. எனினும் அவ்வாறான நிலையங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் நாம் கண்காணிப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளோம். எந்த விதத்திலும் அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் நாம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் அதனை நிறுத்துவதற்கு நாம் விரைவில் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.