பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பதிவு
ஹசலக 7 எல பகுதியில் பல பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்படி, சிறுவர்கள் பலர் நேற்று (19) தங்கள் வீடுகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் இந்த ரவைகளைக் கண்டுள்ளனர்.
பின்னர் குறித்த சிறுவன் தனது நண்பர்களுக்கும் ரவைகளை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு சிறுவன் வீட்டிற்குச் சென்ற பிறகு தனக்குக் கிடைத்த ரவையை அடுப்பில் போட்டுள்ளார்.
இதன் போது தோட்டா வெடித்துள்ள நிலையில், வீட்டு உரிமையாளர்கள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் வருகைதந்து வெடிப்பு நடந்த வீட்டை ஆய்வு செய்தனர், மேலும் அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.
பின்னர், ஏனைய சிறுவர்களின் வீடுகளையும் சோதனை செய்தபோது, இந்த ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ரவைகளை முதலில் கண்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது வீட்டிற்கு அடுத்துள்ள மற்றொரு வீட்டில் உள்ள விறகு மடுவத்தில் இருந்து கண்டெடுத்ததாக தெரிவித்தார்.
சிறுவர்களிடம் இருந்து சுமார் 30 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.