பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந் தோட்ட நிறுவனங்களுடன் தொடர் பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாகவும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச் சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பி லேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘தேயிலைச் சட்டத்தை திருத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு அனுமதியை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெருந்தோட்டத் தொழிற்றுறையில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறோம். அதன் காரணமாகவே இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் அந்த மக்கள் கோரும் அடிப்படைச் சம்பள அதிகரிப்புக்கான யோசனையும் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், இதற்கு அப்பால் செல்ல வேண்டுமெனில் பெருந்தோட்டக் கம்பனி உரிமையாளர்களுடனும் முகாமைத்துவத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கமைய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதியினால் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கு ஆலோசனை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பள அதிகரிப்பு மாத்திரமல்லாமல் நிறுவனங்களின் கீழுள்ள பெருந்தோட்டங்களி லுள்ள சுகாதார வசதி, குழந்தைகளின் கல்வி, தொழில் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
உதாரணமாக, பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கான வசதிகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு தனிப்பட்ட வகையில் செயற்பட்டு வருகின்றது. 1998ஆம் ஆண்டிலிருந்து பெருந்தோட்ட வைத்தியசா லைகளில் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது.
அதேபோன்று, எப்போதும் நெருக்கடிக்குள் ளாகும் மக்களின் பிரச்சினையாக இருப்பதால் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். பல்வேறு விதமாக இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்’’ என்றார்.