உள்நாடு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டை திருத்தும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை 22 ஆவது திருத்த சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் என தான் நீதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்டமூலம் வெள்ளிக்கிழமை (19) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) எனும் பந்தியில் ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட என்னும் சொற்பதத்துக்கு பதிலாக ஐந்து ஆண்டுகள் எனும் சொற்பதத்தை சேர்க்கும் வகையில் இத்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் சிங்க,தமிழ் உரைகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கியதாக கருதப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும் அல்லது தேர்தல் பணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிரக்கட்சியினரும்,சிவில் அமைப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிபபடுத்துகின்றனர்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த வரைவினை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெறுவதுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவி காலத்துடன் தொடர்புடைய ஒரு விடயத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு கோரும் போது ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் நெருக்கடிக்குள்ளாகும் என எதிர்தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் வாரம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 14 நாட்களுக்குள் இலங்கை பிரஜைகள் எவரும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *