உள்நாடு

நாட்டையே உலுக்கி வந்த இருவர் சிக்கினர்

பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த இரண்டு பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

21 வயதுடைய இளைஞனும், போதைப்பொருளுக்கு அடிமையான அவனது சிறிய தந்தையுமே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொம்பே, வெலிவேரிய மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசங்களில் பெண்களை துஷ்பிரயோகம் செய்து வீடுகளில் பொருட்களை கொள்ளையிடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக கடந்த சனிக்கிழமை “அத தெரண” செய்தி வௌியிட்டது.

வெலிவேரிய பிரதேசத்தில் அண்மையில் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் நான்கு வயது குழந்தை மற்றும் அவரது கணவர் முன்னிலையில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, பொருட்களை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பில், மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் கம்பஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்களால் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 6 நாட்களாக குறித்த இரு கொள்ளையர்களின் பயணம் தொடர்பிலான தேடலில் ஈடுபட்டிருந்த மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இன்று (16) அதிகாலை இருவரையும் கைது செய்துள்ளனர்.

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் போதே ,அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது இருவரும் நிஞ்சா ஆடைகளை போன்ற ஆடைகளையே அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவங்களுக்காக பயன்படுத்திய பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி தொம்பேயில் உள்ள வீடொன்றின் ஜன்னலைத் திறந்து உள்ளே நுழைந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

அப்போது, ​​வீட்டில் இருந்த பெண்ணின் ஆடைகளை அறுத்து, கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வீட்டினுள் முன்பு போலவே நுழைந்த இருவரும் பெண் மற்றும் அவரது கணவரின் ஆடைகளை கழற்றி கட்டி வைத்து அங்கிருந்த சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

அப்போது, ​​சந்தேக நபர்கள் இருவரும் அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, ​​அவர் 3 மாத குழந்தையின் தாயாக இருப்பதால், துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என அவரது கணவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் வெலிவேரிய ஹெனேகம வீடொன்றிற்கு ஜன்னல் வழியாக நுழைந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டின் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை குடியிருப்பாளரின் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்து கையடக்கத் தொலைபேசியை கழிவறையில் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இவர்கள் அவிசாவளை மற்றும் எஹலியகொட ஆகிய இடங்களிலும் இதே முறையில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *