சுயாதீனப் பாடலுக்கு ரசிகர்கள் வழங்கிய அமோக வரவேற்பு!

ரெளடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ, என்ஜாய் எஞ்சாமி என்கிற சுயாதீனப் பாடலினால் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த என்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் விடியோ சமீபத்தில் யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.

யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை சுயாதீனப் பாடலான என்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது. மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியான இப்பாடலுக்கு ஐந்தே நாள்களில் 8.7 மில்லியன் (87.50 லட்சம்) பார்வைகள் கிடைத்துள்ளன. ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுயாதீனப் பாடல்களில் என்ஜாய் எஞ்சாமி ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவே சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!