சிந்து சமவெளியின் அழிவிற்கு காலநிலை மாற்றமும் காரணம் ?

சிந்து சமவெளியின் அழிவிற்கு காலநிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகின் பண்டைய நாகரிகங்களில் பழமையானதாக சிந்து சமவெளி நாகரிகம் உள்ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகத்தின் கட்டுமான அமைப்புகள், கலாச்சார மற்றும் வாழ்க்கை முறை குறித்து ஏற்கெனவே பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பண்டைய கால மக்களின் வாழ்நிலையை அறிய இந்த ஆய்வுகள் உதவுகின்றன. எனினும் சிந்து சமவெளியின் வீழ்ச்சி குறித்து பல்வேறு கருதுகோள்கள் எழுந்தாலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் 5000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவிற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்ஐடி)-இன் ஆராய்ச்சியாளர் நிஷாந்த் மாலிக் தலைமையிலான குழுவினர் தெற்காசிய குகைகளில் இருந்த ஸ்டாலாக்மைட் கனிம படிமங்களை ஆய்வு செய்தனர்.

கணினி உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்ட கனிமங்கள் பருவமழையின் நிலை குறித்த தகவல்களைப் பெற உதவின. இந்த ஆய்வில் சிந்து சமவெளியில் பருவமழை முறைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

ஆரியர்கள் படையெடுப்பு மற்றும் பூகம்பங்கள் உள்பட சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்தது குறித்து பல கருதுகோள்கள் இருந்தாலும், காலநிலை மாற்றம் பெரும்பாலும் சாத்தியமான ஒன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!