குழந்தைகளுக்கு பால் புகட்டும் போது இறப்பரிலான சூப்பியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

இன்றைய திகதியில் எம்முடைய இளம்பெண்கள் பலரும் வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தவிர்க்க முடியாத பல காரணங்களால் தங்களுடைய பிள்ளைகளுக்கு தாய்ப்பால் புகட்டாமல் புட்டி பாலை புகட்டுகிறார்கள். அதன்போது இறப்பராலான சூப்பியைப் பயன்படுத்துகிறார்கள். இதுகுறித்து வீட்டில் இருக்கும் மூத்த குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் இதனை பயன்படுத்தலாமா? பாதுகாப்பானதா? என்ற குழப்பம் பெண்களுக்கு ஏற்படுகிறது.

Pacifier எனப்படும் இறப்பரினாலான நிப்பிள் அல்லது சூப்பியைப் பயன்படுத்துவது சில தருணங்களில் நன்மையும், பல தருணங்களில் தீமையையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சில பிள்ளைகள் தாய்ப்பால் அருந்திய பிறகும் தங்களது வாயை சப்புவதை நிறுத்தாது. தொடர்ந்து அம்மாதிரியான செய்கையை செய்து கொண்டிருக்கும். இவர்களுக்கு இறப்பரினாலான நிப்பிள் அதாவது சூப்பி கொடுத்தால் மட்டுமே அதிலிருந்து சமாளிக்கலாம். இல்லை என்றால் இவர்கள் தங்களது கட்டை விரலையோ அல்லது வேறு விரல்களையோ வாயில் வைத்துக் கொண்டு சூப்பும் பழக்கத்திற்கு ஆளாகலாம்.

பயணங்களில் தாய்ப்பால் புகட்டுவது அசௌகரியமாக உணரும் தருணங்களில் இத்தகைய நிப்பிள் அல்லது சூப்பி ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்குகிறது. குழந்தையின் அழுகை தடுக்கப்படுகிறது. தாயின் மன அழுத்தமும் குறைகிறது.

இந்த சூப்பியை பயன்படுத்துவதால் சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது குழந்தைகள் தாய்ப்பால் அருந்துவதில் குழப்ப நிலை ஏற்பட்டு தாய்ப்பாலை தவிர்க்கும் சூழல் உருவாகும். சில குழந்தைகளுக்கு இதற்கு பழக்கமாகி விட்டால், அவர்கள் வாயிலிருந்து இந்த சூப்பியல எடுக்க இயலாது. அவர்கள் இதற்கு அடிமையாகி விடக்கூடும்.

சில பெற்றோர்கள் தங்களது பிள்ளை அழும் பொழுது பால் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டால்,  உடனடியாக இந்த சூப்பியை குழந்தையின் வாயில் வைத்து விடுவார்கள். இதனை சுவைத்து தனது பசியை தணித்துக் கொள்ளும். ஆனால் இவை உடலுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

இரண்டு வயதுக்குப் பின்னரும் இத்தகைய சூப்பியை குழந்தை பயன்படுத்த அனுமதித்தால் அவர்களது முக அமைப்பு, தாடை அமைப்பு , பற்களின் உறுதி நிலை போன்றவற்றில் பல்வேறு சமச்சீரற்ற தன்மை உண்டாகும்.

இந்த சூப்பியை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் உரிய முறையில் சுத்திகரித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இவை நடைமுறையில் சாத்தியப் படாததால் இதன் காரணமாகவே குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.

இந்த சூப்பி தரமான மூலப் பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறதா..? என்பதை உறுதி செய்துகொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் சுத்திகரித்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். இந்த நிலையை மனதில் வைத்துக்கொண்டே இதனை பயன்படுத்த வேண்டும். இதற்கு செலவு கூடுதலாகும் என்பதால் இந்த சூப்பியை பயன்படுத்துவதை தவிர்ப்பது தான் சரியான நடைமுறை.

டொக்டர் ஸ்ரீதேவி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!