இரவில் வியர்த்தால்..இந்த பிரச்சனை என்று அர்த்தம்

இரவில் தூங்கும்போது அறைக்குள் போதிய காற்றோட்ட வசதி இல்லாவிட்டாலோ, போர்வையால் நன்றாக மூடி இருந்தாலோ உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. அறையின் வெப்பநிலையும், காற்றோட்ட வசதியும் சீராக இருந்தும் உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறிக்கொண்டிருந்தால் அது ‘இரவு வியர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது.

சிலர் நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் எழும்போது அணிந்திருக்கும் ஆடையெல்லாம் நனைந்து வியர்வை மழையில் குளித்துவிடுவார்கள். அதிக வேலை அல்லது உடல் சோர்வு காரணமாக எப்போதாவது இப்படி நேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரவில் வியர்வையில் குளித்துக்கொண்டிருந்தால் அதன் பின்னணியில் பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அதுகுறித்து பார்ப்போம்.

அதிக தைராய்டு: உடலில் அதிகப்படியான வியர்வை மற்றும் அதிக வெப்பத்தை உணர்வது ஹைப்பர் தைராய்டிசத்தின் முக்கிய அறிகுறிகளாகும். தைராய்டு சுரப்பிதான் உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அது அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யத்தொடங்கும்போது வழக்கத்திற்கு மாறாகவோ, அசாதாரணமாகவோ உடல் இயக்க செயல்பாடு நடைபெறும். வழக்கத்துக்கு மாறாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதுபோல் பசியும், தாகமும் எடுக்கும். இதய துடிப்பும் வேகமெடுக்கும். கைகள் நடுங்கத்தொடங்கும். அதிக வியர்வையுடன் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்பதை உணரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

குறைந்த ரத்த சர்க்கரை: நீரிழிவு நோயாளியாக இருந்தால் இரவு வியர்வைக்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம். சிலருக்கு தூங்க செல்லும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு சரியாக இருக்கும். ஆனால் தூங்கியதும் குளுக்கோஸ் அளவு திடீரென்று குறைந்து போய்விடும். பகலில் அதிக வேலை பார்த்தாலோ, மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்தாலோ, இரவில் தாமதமாக சாப்பிட்டாலோ இந்த பிரச்சினை எழலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் பயன்படுத்தும் பட்சத்தில் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் காரணமாக இருக்கலாம். தூங்க செல்லும் முன்பு குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் நன்றாக சாப்பிடுவது நல்லது.

சுவாசிப்பதில் சிரமம்: இரவில் சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் எழுந்தால் ‘சிலீப் அப்னியா’ எனும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். அதாவது உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. இதன் காரணமாக அதிகமாக வியர்க்க தொடங்கும். ஒவ்வொரு முறையும் மூச்சை நன்றாக உள் இழுத்து சுவாசிக்க தொடங்கும்போது தசைகள் இருமடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சுவாச கோளாறு பிரச்சினை இருப்பவர்களுக்கு இரவில் வியர்வை பிரச்சினை அதிகரிக்கும்.

மார்பு வலி: இரவில் கடுமையான மார்பு வலி பிரச்சினை எழுந்தால் அதுவும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். உடலை நிமிர்த்த முடியாது. இது ‘ஆசிட் ரிப்ளக்ஸ்’ எனப்படும். இதன் காரணமாக இரவில் வியர்வை அதிகமாக வெளிப்படும். இத்தகைய பிரச்சினை இருந்தால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குறைவாக சாப்பிடுவது நல்லது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், தக்காளி கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இந்த பிரச்சினை எழுந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

மருந்துகள்: காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சாப்பிடும் மருந்துகள் கூட இரவில் வியர்வை வெளிப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கும். வென்லாபாக்சின், புப்ரோபியன், கார்டிசோன் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சாப்பிடும் மருந்துகளும் வியர்வை சுரப்பியை தூண்டக்கூடும். இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு இரவில் அதிகமாக வியர்த்தால் மருத்துவரை அணுகி மாற்று மருந்து சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!